×

அத்தியாவசிய, அவசர பணிகளுக்காக 200 மாநகர பேருந்து இயக்கம்

சென்னை: அத்தியாவசியம் மற்றும் அவசர தேவைகளுக்கான அலுவலர்கள், பணியாளர்களை அழைத்துவர நேற்று (25ம் தேதி) 200 மாநகர் போக்குவரத்து கழகப் பேருந்துகள் இயக்கப்பட்டது. இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முதல்வர் உத்தரவின் பேரில், போர்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  மேலும், அத்தியாவசிய மற்றும் அவசரப் பணிகளுக்கு  அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளை இயக்கிட போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உத்தரவிட்டுள்ளார்.பொதுமக்களின் நலன் கருதி, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அத்தியாவசியப் பணிகளான மருத்துவம், பொது சுகாதாரம், குடிநீர், மின்சாரம், பால் மற்றும் அரசின் முக்கிய துறைகளில் குறைந்த அளவில் அலுவலர்கள், தொழிலாளர்கள், பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. அந்தவகையில், அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் பணிக்கு வருகிற வகையில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், 200 பேருந்துகள் நேற்று முதல் இயக்கப்படுகின்றன.

 தலைமைச் செயலக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் ஆகியோர் தங்களது பணிக்கு வந்துசெல்ல ஏதுவாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான சிங்கப்பெருமாள் கோயில், கூடுவாஞ்சேரி, தாம்பரம், பூவிருந்தவல்லி, மணலி, எண்ணூர், நெற்குன்றம், தேனாம்பேட்டை மற்றும் துரைப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.   இத்தகைய அவசரப் பணிகளுக்கு, மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் போதிய பேருந்துகளும் ஓட்டுநர்களும் தயார் நிலையில் உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : Municipal Bus Movement , 200 Municipal Bus Movement,Essential ,Urgent Work
× RELATED 10ம் வகுப்பு மாணவர்கள் தேர்வுக்கான...